Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
தீமைக்கும் நன்மை செய்
Bairava News

தீமைக்கும் நன்மை செய்!

சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன  இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை.

ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான்.

தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான்.  உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.

பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.

என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின.

அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும்  சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது!

பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது.

ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான்.

கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை.

உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது?  ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான்.

இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன்.

அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.

இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது!

விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார்.

தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள்.

மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது.  மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 07.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 07.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 06.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 06.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 04.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 04.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 03.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 03.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 02.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 02.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Swamiji Blessings
Swamiji Blessings
மேலும் ...
வீடியோ படங்கள்
cancer video
cancer video
cancer video
temple
cancer
temple
மேலும் ...